உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற தே.மு.தி.க.வினர் 9 பேர் கைது
உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற தே.மு.தி.க.வினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கம் தீர்ப்பை பெற்று தந்தமைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தே.மு.தி.க.வை சேர்ந்த சிலர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க இருப்பதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் விராலிமலை தாலுகா கலிமங்கலம் பகுதியில் இருந்த தே.மு.தி.க. வை சேர்ந்த மாவட்ட கழக செயலாளர் கார்த்திகேயன் (வயது 43), விராலிமலை மத்திய ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் (42), புதுக்கோட்டை நகர கழக செயலாளர் பரமஜோதி (43) உள்ளிட்ட 9 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கைது செய்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் தங்க வைத்தனர். இதனையறிந்த தே.மு.தி.க.வினர் சிலர் சோதனைச்சாவடி பகுதியில் பஸ் மறியலில் ஈடுபட முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற விராலிமலை போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு கைது செய்யப்பட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் 9 பேரையும் போலீசார் விடுவித்தனர்.