சென்னையில் நடந்து வரும் 2-வது கட்ட பணிகளில் டவுட்டன் சந்திப்பு, போரூர், மேடவாக்கம் உள்ளிட்ட 9 ரெயில் நிலையங்கள் நீக்கம்
சென்னையில் நடந்து வரும் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகளில் டவுட்டன் சந்திப்பு, போரூர், மேடவாக்கம் உள்ளிட்ட 9 ரெயில் நிலையங்கள் நீக்கப்பட்டு புதிய வரைப்படம் வெளியிடப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் 2-ம் கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் 128 ரெயில் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதன் அடிப்படையில் மொத்த தூரம் 118.1 கிலோ மீட்டராகவும், ரெயில் நிலையங்களின் எண்ணிக்கை 118 ஆகவும், மொத்த இடங்களின் எண்ணிக்கை 120-ல் இருந்து 112 ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது. திட்டத்துக்கான காலக்கெடு 2026-ம் ஆண்டு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள குறுகிய தூரம் மற்றும் சீரமைப்பு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் இருந்து குறைந்தது 9 ரெயில் நிலையங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்டச்செலவில் சுமார் ரூ.1,200 கோடி வரை மிச்சப்படுத்தப்பட உள்ளது. ஆனால், ஒவ்வொரு ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட தூரம் 1 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் எந்தப்பகுதிகளும் புறக்கணிக்கப்படாததால், பயணிகளும் ரெயில் நிலையங்களை அணுக நீண்ட தூரம் செல்ல வேண்டியதில்லை.
இதனால் தற்போது புதுப்பிக்கப்பட்ட 2-ம் கட்ட வழித்தட வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 3-வது வழித்தடத்தில் உள்ள தபால்பெட்டி, டவுட்டன் சந்திப்பு மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி, 4-வது வழித்தடத்தில் உள்ள பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா மற்றும் மீனாட்சி கல்லூரி, 5-வது வழித்தடத்தில் உள்ள காளியம்மன் கோவில், போரூர், மேடவாக்கம் ஆகிய ரெயில் நிலையங்கள் நீக்கப்பட்டு உள்ளன.
மேடவாக்கத்தில், தற்போது உள்ள நெடுஞ்சாலை மேம்பாலத்துக்கு மேல் இந்த வழித்தடங்கள் அதிக உயரத்தில் இருக்கும். மேடவாக்கம் சந்திப்பு நிலையத்துக்கும், மேடவாக்கம்-3 என்றும் அழைக்கப்படும் நிலையத்துக்கும் இடையே உள்ள சாய்வு மட்டத்தில் தொழில்நுட்ப சிக்கல் உள்ளது. இதனால் அந்த நிலையம் அகற்றப்பட்டது.
இதில், தபால்பெட்டி, டவுட்டன் சந்திப்பு, செயின்ட் ஜோசப் கல்லூரி, பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா மற்றும் மீனாட்சி கல்லூரி ஆகிய 6 ரெயில் நிலையங்கள் அடுத்த ரெயில் நிறுத்தத்தில் இருந்து 750 மீட்டருக்குள் இருப்பதால் அகற்றப்பட்டுள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு பதிலாக, கோயம்பேடுவில் ஒரு உயர்த்தப்பட்ட ரெயில் நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது. இது முதல் வழித்தடம் ரெயில் நிலையத்துடன் இணைக்கப்படும். வழித்தடம் 3 மற்றும் 5-வது வழித்தடத்துக்கு தொடக்க ரெயில் நிலையமான மாதவரம் பால் பண்ணை ஒரு ரெயில் நிலையமாகவும் கருதப்படுகிறது.
ஒரு சில இடங்களில், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, ரெயில் நிலையங்களுக்கு இடையே வழக்கமாக பராமரிக்கும் 1 கிலோமீட்டர் தூரத்தை 100 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை தூரமாகவோ அல்லது அருகில் வரும் படியாக ரெயில் நிலையங்களின் இருப்பிடம் மாற்றப்பட்டு உள்ளது. ரெயில் நிலையங்களுக்கு செல்ல பயணிகள் அதிக தூரம் நடக்க வேண்டியதில்லை. திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் திட்டமிட்டிருந்த அனைத்து இடங்கள் அல்லது பகுதிகளும் உள்ளடங்கி உள்ளன. சுரங்க பிரிவிலும் பணத்தை சேமிப்பதற்காக விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.