90 செங்கல் சூளைகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும்-பேரையூர் தாசில்தார் உத்தரவு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம் என்பதால் 90 செங்கல் சூளைகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும் என பேரையூர் தாசில்தார் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
பேரையூர்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம் என்பதால் 90 செங்கல் சூளைகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும் என பேரையூர் தாசில்தார் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
90 செங்கல் சூளைகளுக்கு நோட்டீஸ்
பேரையூர் தாலுகாவில் உள்ள பேரையூர், விஜயநாகையாபுரம், சிலைமலைப்பட்டி, சாப்டூர், வண்டாரி, எம்.கல்லுப்பட்டி, எழுமலை, டி.கிருஷ்ணாபுரம், துள்ளுக்குட்டிநாயக்கனூர், சின்னபூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செங்கல் சூளைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த செங்கல் சூளை தொழிலை நம்பி நூற்றுக்கணக்கான கூலி தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பேரையூர் தாலுகாவில் உள்ள 90 செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு பேரையூர் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1981-ன் படி சாப்டூர் வனச்சரணாலயம் எல்லையை சுற்றி 6.21 கி.மீ.வரை உள்ள பரப்பளவு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மண்டலம் என்பதால் செங்கல் சூளை இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்துக்குள் செங்கல் சூளை இயங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும். தவறினால் அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை நோட்டீசை நில அளவையர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு செங்கல் சூளைக்கும் சென்று அதனுடைய உரிமையாளர்களிடம் கொடுத்தனர். மேலும் அனுமதி பெறாமல் செங்கல் காளவாசல்கள் இயங்குவதால் அங்குள்ள செம்மண் குவியல்களை அளவீடு செய்தனர். அங்குள்ள செம்மண் எப்படி வந்தது? போன்ற விவரங்களை சேகரித்தனர்.
வருவாய்த் துறையினரின் இந்த அறிவிப்பால் செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அதனை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரம் குறித்து கவலை அடைந்துள்ளனர்.