மாவட்டத்தில் 902 ஏக்கர் தரிசு நிலங்கள் சாகுபடி நிலங்களாக மாற்றம்-கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம் மாவட்டத்தில் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 902 ஏக்கர் தரிசு நிலங்கள் சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
வேளாண்மை உற்பத்தி குழு கூட்டம்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை உற்பத்தி குழு கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விதை, ரசாயன உரங்கள் வினியோகம் மற்றும் உழவர் சந்தைகள், குளிர்பதன கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த மேம்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் 172 கிராம ஊராட்சிகளில் உள்ள 902 ஏக்கர் தரிசு நிலங்களை மாற்றி சாகுபடி நிலங்களாக கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு 16 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசன முறையை பின்பற்றி 82 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் மற்றும் பழக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 48.8 ஏக்கர் பரப்பளவில் சமுதாய காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
விற்பனை கூடங்கள்
மாவட்டத்தில் 70 ஆயிரத்து 329 ஏக்கர் பரப்பளவில் நெல், சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம் உள்ளிட்ட வேளாண் பயிர்களும், 51 ஆயிரத்து 593 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி, தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் என மொத்தம் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 922 ஏக்கர் பரப்பளவில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்தி பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி அதிகபட்ச விலைக்கு மாவட்டத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்று பயனடையலாம். மேலும் விளைபொருட்களை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட குளிர்பதன கிடங்குகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.