2016 முதல் 2022 வரை கேரளாவில் வனவிலங்குகள் தாக்குதலுக்கு 909 பேர் உயிரிழப்பு
கடந்த 10 ஆண்டுகளில் காட்டு யானை தாக்குதலுக்கு 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவின் மானந்தவாடியில் காட்டு யானை தாக்கியதில் நேற்று ஒருவர் உயிரிழந்தார். கடந்த 4 மாதங்களில் வனவிலங்குகளின் தாக்குதலால் ஏற்பட்ட 4-வது உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 909 பேர் வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். 7,492 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் காட்டு யானை தாக்குதலுக்கு 53 பேர் உயிரிழந்த நிலையில், வயநாட்டில் மட்டும் 43 பேர் பலியாகி உள்ளனர். புலியால் ஏழு பேரும் காட்டெருமையால் இரண்டு பேரும் காட்டுப்பன்றியால் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 203 பேருடைய குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.
காடுகளுக்குள் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்வதே வனவிலங்குகள் வெளியேற காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து வனவிலங்குகளின் தாக்குதலுக்கு மனித உயிர்கள் பறிபோவதை தடுக்க அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கேரள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.