அத்திக்கடவு-அவினாசி திட்டம் - 916 குளங்களுக்கு தண்ணீர் விட்டு சோதனை ஓட்டம் நிறைவு


அத்திக்கடவு-அவினாசி திட்டம் - 916 குளங்களுக்கு தண்ணீர் விட்டு சோதனை ஓட்டம் நிறைவு
x
தினத்தந்தி 18 Aug 2023 12:30 AM IST (Updated: 18 Aug 2023 9:43 AM IST)
t-max-icont-min-icon

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் 916 குளங்களுக்கு தண்ணீர் விட்டு சோதனை ஓட்டம் நிறைவு பெற்றது. அந்த திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்
கோவை

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் 916 குளங்களுக்கு தண்ணீர் விட்டு சோதனை ஓட்டம் நிறைவு பெற்றது. அந்த திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சியான பகுதியில் உள்ள குளம்-குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அத்திக்கடவு-அவினாசி திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.1,657 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் காலிங்க ராயன் அணைக்கட்டு அருகே மழைக்காலத்தில் ஆற்றில் செல்லும் உபரிநீரை எடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப் பட்டது. இதற்காக காலிங்கராயன் அணைக்கட்டு, நல்லாகவுண்டன்பாளையம், திருவாச்சி, போளநாயக்கன்பாளையம், எம்மாம் பூண்டி, அன்னூர் ஆகிய 6 இடங்களில் நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

1,045 குளங்கள்

ஒவ்வொரு நீர் உந்து நிலையங்களில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல 105 கி.மீ. தூரத்துக்கு 8 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட பிரதான குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. 953 கி.மீ. தூரத்துக்கு கிளை குழாய் அமைக்கப்பட்டு இருக்கிறது. முதல் 2 நீரூந்து நிலையங்கள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் செல்லாது.

3-வது நீரூந்து நிலையத்தில் இருந்து 4-வது நிலையம் வரை 61 குளங்கள், 4 -வது நிலையத்தில் இருந்து 5-வது நிலையம் வரை 392 குளங்களும், 6-வது நிலையம் மூலம் 244 குளங்கள் என்று மொத்தம் 1,045 குளங்கள் பயன்பெறும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன.

சோதனை ஓட்டம்

இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் குழாய்கள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் விட்டு சோதனை ஓட்டம் தொடங்கியது. இதன் மூலம் வறட்சி பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் சென்றதால் 30 ஆண்டுகளுக்கு மேல் தண்ணீர் நிரம்பாத குளங்களும் நிரம்பியது. இந்த 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கனவு திட்டம் தற்போது நிறைவேறியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது வரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 916 குளங்களுக்கு சோதனை ஓட்டம் மூலம் தண்ணீர் விடப்பட்டு உள்ளது. இன்னும் 129 குளங்கள், குட்டைகளுக்கு மட்டுமே சோதனை ஓட்டத்தில் தண்ணீர் விட வேண்டும். இந்த பணி முடிந்ததும், திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

விரைவில் தொடங்கப்படும்

அத்திக்கடவு -அவினாசி திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 258 குளங்கள், திருப்பூர் மாவட்டத்தில் 428 குளங்கள், ஈரோட்டில் 359 குளங்கள் என்று மொத்தம் 1,045 குளங்கள் பயன்பெறும். ஒவ்வொரு குளத்துக்கும் தண்ணீர் செல்ல குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.

அதில் தானியங்கி கருவியும் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த குளம் நிரம்பினால் தானாகவே தண்ணீர் செல்வது நின்றுவிடும்.

பவானி ஆற்றில் குறைந்தது 250 கனஅடி தண்ணீர் சென்றால் தான் இந்த திட்டத்துக்கு தண்ணீர் எடுக்க முடியும். தற்போது தண்ணீர் மிகக்குறைவாக செல்கிறது. இதனால் தற்போது தண் ணீர் எடுக்க முடியவில்லை.

இதுவரை 916 குளங்களுக்கு தண்ணீர் விட்டு சோதனை ஓட்டம் நிறைவு பெற்று உள்ளது. இன்னும் 129 குளங்களுக்கு மட்டும் தான் தண்ணீர் விட்டு சோதனை நடத்தப்பட வேண்டும். அந்த பணி முடிந்ததும் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்படும்.


Next Story