எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் 92.38 சதவீதம் பேர் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் 92.38 சதவீதம் பேர் தேர்ச்சி
கோவை
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கோவை மாவட்டத்தில் 92.38 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் மாநில அளவில் 9-வது இடத்துக்கு முன்னேறியது.
92.38 சதவீதம் பேர் தேர்ச்சி
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் உள்ள கோவை நகரம், பொள்ளாச்சி, எஸ்.எஸ்.குளம், பேரூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 524 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 827 மாணவர்களும், 19 ஆயிரத்து 804 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 631 பேர் எழுதினர்.
இந்தநிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் கோவை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 587 மாணவர்களும், 19 ஆயிரத்து 27 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 611 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 88.69 சதவீதமும், மாணவிகள் 96.08 சதவீதமும் தேர்ச்சியடைந்தனர். கோவை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 92.38 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.
9-வது இடத்துக்கு முன்னேற்றம்
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் 2 ஆண்டுகளும் 100 சதவீத மாணவர்களும் தேர்ச்சியடைந்ததாக அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்த பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் 92.38 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளது.
இதுவே கடந்த 2019-ம் ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவில் கோவை மாவட்டத்தில் 96.44 சதவீதம் பேர் வரை தேர்ச்சி பெற்றனர். அப்போது மாநில அளவிலான பட்டியலில் 14-வது இடத்தை பிடித்தது. தற்போது 9-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 2019-ம் ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 4.06 சதவீதம் குறைந்தது. ஆனாலும் மாநில அளவிலான பட்டியலில் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்து உள்ளது.
----
Reporter : S.MUTHUKUMAR_Staff Reporter Location : Coimbatore - Coimbatore