மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 9,24,125 பேருக்கு பரிசோதனை


மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 9,24,125 பேருக்கு பரிசோதனை
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 9,24,125 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

மக்களை தேடி மருத்துவம்

திருப்பத்தூர் நகராட்சி ஈத்காமைதானம் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்து, மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

9,24,125 பேருக்கு பரிசோதனை

இத்திட்டத்தின்கீழ் 110 இடைநிலை சுகாதார பணியாளர்கள், 164 பெண் சுகாதார தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வீடுகளிலேயே தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5.8.2021 முதல் 1.6.2023 வரை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 18 வயதிற்கு மேற்பட்ட 9,24,125 பேருக்கு தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 70,165 பேருக்கு ரத்த அழுத்தம், 29,932 பேருக்கு சர்க்கரை நோய், 28,696 பேருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பது கண்டறிய்பட்டுள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு 2 மாதத்திற்கு தேவையான மருந்து பெட்டகங்கள் வீட்டிலேயே வழங்கப்பட்டு வருகின்றன.

தவறாமல் செய்ய வேண்டும்

இதில் வாய்ப் புற்றுநோய் 22 பேருக்கும், மார்பக புற்றுநோய் 64 நபர்களுக்கும், கர்ப்பப்பை புற்றுநோய் 76 பேருக்கும் கண்டறியப்பட்டு சிரிச்சையில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 6 வட்டாரங்கள், 3 நகராட்சிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் வாகனங்கள் வழங்கப்பட்டு வீடு தேடி சேவைகளை வழங்கி வருகின்றனர்.

இந்த திட்டத்தின்கீழ் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், ரத்த அழுத்த பரிசோதனையும், 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனையும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மார்பக, கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் பரிசோதனையும் தவறாமல் ஆண்டுக்கு ஒரு முறையாவது செய்துகொண்டு தங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட மனநல மருத்துவ அலுவலர் பிரபாவராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story