95 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்பத்தூரில் 95 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் அளித்து வந்தனர். அதன்பேரில் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெ.கோபாலகிருஷ்ணன் தலைமையில், திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் திருப்பத்தூர் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள கடைகளில் சுமார் 95 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனர். மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெ.கோபாலகிருஷ்ணன் கூறுகையில் மாவட்டம் முழுவதும் இச்சோதனை தொடர்ந்து நடைபெறும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது. மீண்டும் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, வழக்கு பதியப்படும் என்றார்.