அணைக்கரை கீழணைக்கு 95 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
அணைக்கரை கீழணைக்கு 95 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ளது.
மீன்சுருட்டி:
கீழணை
அரியலூர்-தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் பகுதியில் அணைக்கரை கீழணை உள்ளது. மீன்சுருட்டி அருகே உள்ள இந்த அணையின் மொத்த கொள்ளளவு 9 அடியாகும். கல்லணையை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீர், இந்த கீழணையில் தேக்கப்பட்டு திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் தென்னவநல்லூர், வேம்பக்குடி உள்ளிட்ட கிராம பகுதிகளிலும், கடலூர் மாவட்ட பகுதிகளிலும் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வீராணம் ஏரிக்கு செல்லும் தண்ணீர் பாசனத்திற்கும், சென்னைக்கு குடிநீர் தேவைக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்றது. அப்போது கீழணைக்கும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு அதிக அளவில் தண்ணீர் வந்தது. பின்னர் படிப்படியாக தண்ணீரின் அளவு குறைந்தது.
நீர் வரத்து
இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து அதிக அளவில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கீழணைக்கு தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது கீழணைக்கு 95 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே கீழணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதில் வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்படாததால் பொதுப்பணித்துறையினர் உபரிநீரை கொள்ளிடம் ஆற்றின் வழியாக திறந்து விட்டுள்ளனர். இதனால் கீழணையில் இருந்து வினாடிக்கு 95 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக சென்று கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திர பள்ளி என்ற இடத்தில் கடலில் வீணாக கலக்கும் நிலை உள்ளது.