ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 960 மில்லியன் கன அடி நீர் வழங்க வேண்டும்-பாசன சங்க நிர்வாகிகள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 960 மில்லியன் கன அடி நீர் வழங்க வேண்டும் என்றும், வருகிற 11-ந்தேதி முதல் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று பாசன சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.
ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் ஒப்பந்தப்படி கேரளாவிற்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஆழியாறு அணை திட்டக்குழுவினர் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் நேற்று பி.ஏ.பி. அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் (பொறுப்பு) பாண்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற 11-ந்தேதி முதல் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். அப்போது செயற்பொறியாளர் முருகேசன், திட்டக்குழு தலைவர் செந்தில், புதிய ஆயக்கட்டு பாசன சங்க தலைவர் அசோக்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பகிர்மான குழு, பாசன சபை தலைவர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து ஆழியாறு திட்டக்குழு தலைவர் செந்தில் கூறியதாவது:-
960 மில்லியன் கன அடி
ஆழியாறு புதிய ஆயக்கட்டில் மொத்தம் 44 ஆயிரத்து 350 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பாசனத்திற்கு அ, ஆ என இரு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் 2500 முதல் 2700 மில்லியன் கன அடி வரை, குறைந்தபட்சம் 75 நாட்கள் வீதம் தண்ணீர் வழங்கப்படும். இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் அணையின் நீர்இருப்பை கருத்தில் கொண்டு வருகிற 11-ந்தேதி முதல் 30 நாட்களுக்கு 960 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் அ மண்டலத்தில் பொள்ளாச்சி, சேத்துமடை, பீடர் கால்வாய் வழியாகவும், ஆ மண்டலத்தில் வேட்டை க்காரன்புதூர் கால்வாய் மூலம் 22 ஆயிரத்து 320 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே அணையில் நீர் இருப்பை அதிகப்படுத்தி கடைமடை வரை தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.