1,496 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.97.03 கோடி கடன் உதவி- அமைச்சர் மூர்த்தி வழங்கினார்


1,496 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.97.03 கோடி கடன் உதவி- அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
x

1,496 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.97.03 கோடி கடன் உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

மதுரை


1,496 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.97.03 கோடி கடன் உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

ரூ.104 கோடி கடன்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார். அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி கடன் உதவிகளை வழங்கினார். விழாவில் 1,496 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.97 கோடியே 3 லட்சமும், 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி கடனாக ரூ.7 கோடியே 2 லட்சமும் என மொத்தம் ரூ.104 கோடியே 5 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:- மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் மொத்தம் 17 ஆயிரத்து 784 குழுக்கள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு இந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.980 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதில் கடந்த 3-ந் தேதி வரை 5 ஆயிரத்து 668 குழுக்களுக்கு ரூ.308 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இன்றைய தினம் (நேற்று) மொத்தம் ரூ.104 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

உரிமைத்தொகை

இந்த கடன் பெற்ற குழு உறுப்பினர்கள் ஆயத்த ஆடைகள் தயாரித்தல், சிற்றுண்டி கடை, உணவகம், பலசரக்கு கடைகள், மாவு, மசாலா பொருட்கள் உற்பத்தி, கைவினை பொருட்கள் உற்பத்தி, விவசாய தொழில்களான ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்ற தொழில்களை மேற்கொண்டு பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் பிறரின் கையினை எதிர்பார்த்து வாழாமல் தாங்களே சுயமாக தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு சமைத்து கொடுத்துவிட்டு தாங்கள் வேலைக்கு செல்ல முடியாது என்பதற்காக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இந்த திட்டங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக பெண்கள் உரிமைத்தொகை ரூ.1000 அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சரவணன், வெங்கடேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story