பிளஸ்-1 தேர்வினை 9,895 மாணவ-மாணவிகள் எழுதினர்
கரூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வினை 9,895 மாணவ- மாணவிகள் எழுதினர். 1,153 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்தவகையில் கரூரில் பிளஸ்-1 பொதுத்தேர்வை முன்னிட்டு மாணவ-மாணவிகள் தாங்கள் தேர்வு எழுதும் தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணி முதலே வர தொடங்கினர். தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். சில மாணவர்கள் தேர்வு நன்றாக எழுத வேண்டும் என அருகில் இருந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்ததையும் காண முடிந்தது. தேர்வு எழுதும் மையத்திற்குள் வந்த மாணவ-மாணவிகள் தாங்கள் தேர்வு எழுத உள்ள அறையின் விவரத்தை தகவல் பலகையில் பார்த்து தெரிந்து கொண்டனர். பின்னர் மாணவ-மாணவிகள் ஒன்றாக அமர்ந்தும், தனித்தனியாக அமர்ந்தும் படித்தனர்.
தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த பேக் மற்றும் புத்தகங்களை தனியாக ஒரு அறையில் வைத்து விட்டு, தேர்வுக்கு தேவையான பேனா, பென்சில் உள்ளிட்டவைகளை மாணவர்கள் எடுத்து வந்தனர். அப்போது தேர்வு மைய கண்காணிப்பாளர் பொதுத்தேர்வு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். இதனைத்தொடர்ந்து மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று அமர்ந்தனர். பின்னர் அவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. தொடர்ந்து கேள்வித்தாள், விடைத்தாள் அளிக்கப்பட்டு மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
கரூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு 43 மையங்களில் நடைபெற்றன. இந்த தேர்வினை எழுத 106 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் தனிதேர்வர்கள் என 11 ஆயிரத்து 48 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில் 9 ஆயிரத்து 895 பேர் தேர்வுகள் எழுதினர். 1,153 பேர் தேர்வு எழுத வரவில்லை. கரூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வினை 9,737 பேரும், பிரெஞ்ச் தேர்வினை 23 பேரும், அரபிக் தேர்வினை 135 பேரும் எழுதினர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக 46 தலைமை ஆசிரியர்களும், 46 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 793 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். கரூர் மாவட்டத்தில் 91 பறக்கும்படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.