திங்கள்சந்தை அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை சகோதரியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு
திங்கள்சந்தை அருகே சகோதரியுடன் ஏற்பட்ட தகராறில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே சகோதரியுடன் ஏற்பட்ட தகராறில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9-ம் வகுப்பு மாணவி
திங்கள்சந்தை அருகே உள்ள பறையன்விளை விநாயகர்தெருவை சேர்ந்தவர் அந்தோணி அமல்ராஜ் (வயது40), கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்தியகலா (36). இவர்களது 2-வது மகள் ஸ்ரீ லட்சுமி (15). இவர் அருகில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
ஸ்ரீ லட்சுமியும் அவரது சகோதரியும் அடிக்கடி சண்டையிடுவதாகவும், அவர்களை சத்தியகலா சமாதானம் செய்வதும் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மாவு அரைப்பது தொடர்பாக சகோதரிகள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதன்பின்பு ஸ்ரீ லட்சுமி மிகுந்த மன வேதனையில் இருந்தார்.
தூக்கில் தொங்கினார்
இந்தநிலையில் மாலையில் சத்தியகலா மூத்த மகளை கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்க்க அழைத்து சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்ப வந்த போது ஸ்ரீ லட்சுமி படுக்கை அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த சத்திய கலா அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் ஸ்ரீ லட்சுமியை மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் ஸ்ரீ லட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரியுடன் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.