வாடிப்பட்டி அருகே கார் டிரைவர் கொலையில் 17 வயது சிறுவன் கைது
வாடிப்பட்டி அருகே கார் டிரைவர் கொலையில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே கார் டிரைவர் கொலையில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
கார் டிரைவர் கொலை
வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பழனியாண்டவர் கோவில் சாலையில் மலையடிவாரத்தில் மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் சோழவந்தான் பூமேட்டு தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் சதீஸ் (வயது 30) பொறுப்பாளராக இருந்து பணியாற்றி வந்தார். சதீஸ் பழனிக்கு பாதயாத்திரை செல்வதால் அவருக்கு பதிலாக அந்த கம்பெனியில் சதீசின் அண்ணன் கார் டிரைவர் மருதுபாண்டி(40) தங்கி இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சதீஸ், அண்ணனை பார்ப்பதற்காக அந்த கம்பெனிக்கு சென்றார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு கட்டிலில் மருதுபாண்டி முகம், அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தோட்ட வேலை செய்வதற்காக தங்கி இருந்த 17 வயது சிறுவனை நிறுவனம் முழுவதும் தேடினார். ஆனால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
சிறுவன் கைது
இது சம்பந்தமாக சதீஸ் வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்தநிலையில் 17 வயது சிறுவன் குலசேகரன்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முத்துப்பாண்டி ராஜாவிடம் சரணடைந்தான். அவனை கிராம நிர்வாக அதிகாரி போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த கொலை சம்பந்தமாக 17 வயது சிறுவன் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
டிரைவர் மருதுபாண்டி அடிக்கடி அவரது தம்பி சதீசை பார்ப்பதற்காக தோட்டத்திற்கு வருவார். வரும் போதெல்லாம் என்னிடம் வீண் பேச்சு கொடுத்து தகராறு செய்வார். சம்பவத்தன்று ஆத்திரம் மூட்டும் வகையில் வம்பு பேசி தகராறு செய்து விட்டு தூங்கினார். இதனால் கோபத்தில் இருந்த நான் அரிவாளை எடுத்து மருதுபாண்டியை வெட்டி கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.