மூதாட்டியிடம் நூதனமுறையில் 2 பவுன் சங்கிலி அபேஸ்


மூதாட்டியிடம் நூதனமுறையில் 2 பவுன் சங்கிலி அபேஸ்
x
தினத்தந்தி 28 Nov 2022 6:45 PM GMT (Updated: 28 Nov 2022 6:46 PM GMT)

பாலிஷ் செய்து தருவதாக கூறி மூதாட்டியிடம் நூதனமுறையில் 2 பவுன் சங்கிலி அபேஸ் திண்டிவனம் அருகே பரபரப்பு

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன்(வயது 55). இவரது தாயார் முனியம்மாள் சம்பவத்தன்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் முனியம்மாளிடம் பித்தளை வளையல்களை பாலிஷ் போட்டு தருவதாக கூறினார். உடனே அவர் தன்னிடம் இருந்த பித்தளை வளையல்களை மர்ம நபரிடம் கொடுத்தார். உடனே அவர் அதை வாங்கி பாலிஷ் செய்து முனியம்மாளிடம் கொடுத்த பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கலியை பாலிஷ் போட்டு தருவதாக கூறினார். இதை நம்பிய முனியம்மாள் தனது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை கழற்றி மர்ம நபரிடம் கொடுத்தார். அதை வாங்கி பாலிஷ் போட்டுக்கொண்டிருந்த மர்ம நபர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். உடனே முனியம்மாள் வீட்டுக்குள் சென்று பாத்தில் தண்ணீர் எடுத்து வந்து பார்த்தபோது மர்ம நபரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதன் பிறகே பாலிஷ் போட்டு தருவதாக கூறி மர்ம நபர் 2 பவுன் சங்கிலியை அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து முனியம்மாளின் மகன் தமிழ்வாணன் கொடுத்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை அபேஸ் செய்துவிட்டு தலைமறைவான மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story