பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் 2 மாடி கட்டிடம்


பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் 2 மாடி கட்டிடம்
x

புதிய தூக்குப்பாலத்தை இயக்க வசதியாக பாம்பன் கடலுக்குள் 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

புதிய தூக்குப்பாலத்தை இயக்க வசதியாக பாம்பன் கடலுக்குள் 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

பாம்பன் ரெயில் பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்த பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

தற்போதுள்ள ரெயில் பாலம் 100 ஆண்டுகளை கடந்து பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் இடைவெளியில், வடக்கு கடல் பகுதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணியானது ரூ.269 கோடி நிதியில் தொடங்கப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது.

2 மாடி கட்டிடம்

இந்த நிலையில் புதிய ரெயில் பாலத்தின் தூண்கள் மீது கர்டர் பொருத்தும் பணி நடந்து வருகின்றது. மற்றொருபுறம் புதிய தூக்கு பாலத்தை இயக்குவதற்கான ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர், மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக கடலுக்குள் 2 மாடி கட்டிடம் கட்டும் பணியும் நடந்து வருகின்றது.

இது பற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டும்பணி தொடங்கியபோது ரூ.269 கோடி நிதியில்தான் தொடங்கப்பட்டது. ஆனால் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரித்த நிலையில் மேலும் ரூ.131 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மொத்தம் ரூ.400 கோடியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

தற்போது மேலும் ரூ.100 கோடி நிதி கேட்டு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. புதிய ரெயில் பாலத்திற்காக கடலுக்குள் மொத்தம் 333 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல் இந்த தூண்கள் மீது மொத்தம் 99 இரும்பு கர்டர்கள் வைக்கப்பட உள்ளன. இதுவரையிலும் 55 கர்டர்கள் பொருத்தும் பணி முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள இரும்பு கர்டர்களும் விரைவில் பொருத்தப்படும்.

புதிய ரெயில் பாலத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒவ்வொரு இரும்பு கர்டரின் நீளம் சுமார் 20 மீட்டர் ஆகும். ஒவ்வொன்றின் எடை 30 டன்.

500 டன் எடையில் தூக்குப்பாலம்

புதிய ெரயில் பாலத்தில் மையப்பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலத்தின் பணிகளை அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தூக்கு பாலத்தை வடிவமைத்து தயார் செய்யும் பணிகள் சத்திரக்குடியில் உள்ள ரெயில்வே கட்டுமான தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. அங்கு ஓரளவு பணிகள் முடிந்த பின்னர் தளவாட பொருட்கள் அனைத்தும் பாம்பன் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தூக்குப்பாலத்தின் பணிகள் தொடங்கப்படும்.

புதிய தூக்குப்பாலத்தை இயக்குவதற்கான ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர், மின்சாதனங்கள் வைக்க வசதியாக புதிய தூக்குப்பாலம் அமைய உள்ள இடத்தின் அருகில் கடலுக்குள் இரண்டு தளத்தில் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஒரு சில மாதங்களில் முடிவடையும். புதிய தூக்குப்பாலம் 70 மீட்டர் நீளத்திலும் சுமார் 500 டன் எடையில் அமைய உள்ளது.

புதிய ரெயில் பாலத்தின் பணிகளில் இதுவரையிலும் 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மீதம் உள்ள 30 சதவீத பணிகளை ஜனவரி மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு கண்டிப்பாக பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story