சென்னைக்கு 2-வது விமான நிலையம் நிச்சயம் வரவேண்டும் -அண்ணாமலை பேட்டி


சென்னைக்கு 2-வது விமான நிலையம் நிச்சயம் வரவேண்டும் -அண்ணாமலை பேட்டி
x

‘சென்னைக்கு 2-வது விமான நிலையம் நிச்சயம் வரவேண்டும்’ என்றும், ‘மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை’ என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம், தேசிய ராணுவ பாதுகாப்பு வழித்தட திட்டத்தின் உந்துசக்தி எனலாம். இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் தமிழகத்துக்கு நன்மை அளிக்கும்.

இந்த திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூட இது உறுதிபடுத்தப்பட்டது. ஆனால் இப்போது தி.மு.க. அரசின் நிலைப்பாடு வேறுமாதிரியாக இருக்கிறது. இத்திட்டம் வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு போன்றோர் கூறிவருகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருபேச்சு, ஆளும்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு என்ற நிலை இருக்கிறது.

எனவே சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மக்களுக்கு நம்பிக்கை இல்லை

சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைவது வரவேற்கத்தகுந்தது. ஆனால் தற்போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எல்லாவகையிலும் ஒரு இடத்தை தேர்வு செய்து, அதற்கு பின்னரே மத்திய அரசின் அனுமதியை தமிழக அரசு பெற்றுள்ளது. ஆனால் மக்கள் திடீரென எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? தமிழக அரசின் திட்டமிடல் சரியாக இல்லை. நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையும் இல்லை.

நிலத்துக்கு 3 மடங்கு அதிக பணம் தருவதாக கூறிய பிறகும் மக்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள். இதற்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. அதனால் மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லாததால் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். எனவே இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு. பரந்தூர் வேண்டாம் என்றால் வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள். முந்தைய அ.தி.மு.க அரசு தேர்வு செய்து அனுப்பிய பட்டியலில் இடம்பெற்ற மாமண்டூரை கூட முடிவு செய்யலாம். எது எப்படி இருந்தாலும், சென்னைக்கு 2-வது விமான நிலையம் நிச்சயம் தேவை. ரூ.20 ஆயிரம் கோடி திட்டத்தை நிச்சயம் நாம் பெற்றாக வேண்டும்.

'ஆசிட் டெஸ்ட்'

ஒரு திட்டம் வந்தாலே எதிர்க்கும் அரசியல் சூழல் மாறவேண்டும். இதற்கு நல்ல எடுத்துக்காட்டுதான் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம். பரந்தூர் திட்டம் ஒரு 'ஆசிட் டெஸ்ட்' போன்றது. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்.

இதற்காக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். இது அவரது கடமையும் கூட. இது நடக்காமல் போனால் மத்திய அரசின் மூலம் நமக்கான அடுத்தடுத்த திட்டங்களையும் நாம் இழக்க நேரிடும்.

அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினைகளில் பா.ஜ.க. எப்போதுமே தலையிட்டது கிடையாது. அது எங்கள் வேலையும் கிடையாது. தமிழகத்தில் ஒரு கட்சியை அழித்து விட்டுதான் நாங்கள் வளர வேண்டும் என்று நினைத்ததே கிடையாது. அ.தி.மு.க. பலமாக இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதற்காக உடனே இதை இட்டுக்கட்டி பேசக்கூடாது.

மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவம் குறித்து நான் பேசியதாக வெளியாகும் ஆடியோ பதிவில் உண்மை இல்லை. சிலர் தங்கள் இஷ்டத்துக்கு அதை மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டியின்போது தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story