சிறுவன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது குழந்தை பலி
விருத்தாசலம் அருகே சிறுவன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
விருத்தாசலம்
விளையாடிய குழந்தை
விருத்தாசலத்தை அடுத்த விஜயமாநகரம் புது ஆதண்டார் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் மலர்விழி(வயது 3). இவள் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள்.
அதே வேளையில் அப்பகுதியை சேர்ந்த மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளில் தனது வயலுக்கு சென்று கொண்டிருந்தான்.
தந்தை, மகன் மீது வழக்கு
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த மலர்விழி மீது, சிறுவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவள் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தாள்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார் மலர்விழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சிறுவன் மற்றும் அவனது தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.