வீட்டின் முன் நின்று கொண்டிருந்த 3 வயது சிறுமி கார் மோதி பலி
நாங்குநேரி அருகே வீட்டின் முன் நின்று கொண்டிருந்த 3 வயது சிறுமி, கார் மோதி பரிதாபமாக இறந்தாள்.
இட்டமொழி:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பரப்பாடி பாண்டிச்சேரி கிராமம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சந்தனமாரி (வயது 23). இவர்களுக்கு சுதாசினி (3) மற்றும் பிறந்து 20 நாட்கள் ஆன 2 பெண் குழந்தைகள்.
நேற்று முன்தினம் இரவு சுதாசினி தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் நிலைதடுமாறி சுதாசினி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சுதாசினி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாண்டிச்சேரி கிராம மக்கள் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், காரை ஓட்டி வந்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் சிறுமியின் தாய் சந்தனமாரி அளித்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்கு பதிந்து கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கார் மோதி 3 வயது சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.