தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவி பலி தாய் கண் முன்னே பரிதாபம்


தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவி பலி தாய் கண் முன்னே பரிதாபம்
x

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தாய் கண் எதிேரயே 5-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் கோவிலம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை

பள்ளிக்கரணை,

சென்னையை அடுத்த நன்மங்கலம் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் வெங்கடேஷ். சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடைய மனைவி கீர்த்தி. இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுடைய மகள் லியோரா ஸ்ரீ (வயது 10). இவர், மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

நன்மங்கலம், மேடவாக்கம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கிறது. இதனால் சாலையின் நடுவில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதால் சாலை குறுகலாக உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

நேற்று காலை கீர்த்தி, தனது மகள் லியோரா ஸ்ரீயை தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது.

இதில் தாய்-மகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். கீர்த்தி இடது பக்கமும், லியோரா ஸ்ரீ வலது பக்கமாக சாலையிலும் விழுந்தார். அப்போது தண்ணீர் லாரி மாணவியின் வயிற்றில் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய மாணவி லியோரா ஸ்ரீ, தாய் கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

தனது கண் எதிரேயே மகள், பலியானதை கண்டு மகளின் உடலை பார்த்து கீர்த்தி கதறி அழுதது, நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

விபத்து நடந்த உடன் தண்ணீர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அணில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் தப்பி ஓடிய தண்ணீர் லாரி டிரைவரான மன்னார்குடியை சேர்ந்த டேவிட் ராஜன் (28) என்பவர் கைது செய்யப்பட்டார். தாயுடன் பள்ளிக்கு சென்ற மாணவி, லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை தண்டையார்பேட்டை நாவலன் நகரைச் சேர்ந்தவர் வர்ணமூர்த்தி(வயது 58). கூலி தொழிலாளியான இவர், மீன்பாடி வண்டி ஓட்டி வந்தார். நேற்று காலை அதே பகுதியில் உள்ள கைலாசம் தெருவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த லாரி வர்ணமூர்த்தி மீது மோதியது. இதில் சாலையில் விழுந்த வர்ணமூர்த்தி, லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான திருவெற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (44) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story