வாய்க்காலில் குளித்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு


வாய்க்காலில் குளித்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
x

வாய்க்காலில் குளித்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

திருச்சி

வாய்க்காலில் குளித்தார்

மண்ணச்சநல்லூர் கணபதி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாருமதி (வயது 42).

இவர் நேற்று உளுந்தங்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் திருப்பைஞ்சீலி செல்லும் சாலையில் உள்ள பட்டத்தளச்சி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தார்.

சங்கிலி பறிப்பு

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், திடீரென வாய்க்காலில் இறங்கி சாருமதியை தண்ணீரில் அமுக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் துணை சூப்பிரண்டு பாரதிதாசன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story