திண்டுக்கல்: 14 வயது சிறுமியை கண்டதும் காதலில் விழுந்த 17 வயது சிறுவன்


திண்டுக்கல்: 14 வயது சிறுமியை கண்டதும் காதலில் விழுந்த 17 வயது சிறுவன்
x
தினத்தந்தி 15 July 2022 4:21 AM GMT (Updated: 16 July 2022 12:16 AM GMT)

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கண்டதும் காதலில் விழுந்ததால் சிறுமியை கடத்தி சென்றதாக 17 வயது சிறுவன் போக்சோவில் கைதானார்.

திண்டுக்கல்:

தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது சிறுவன், கோவையில் தனியார் மில்லில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு பஸ் கிடைக்காததால், திண்டுக்கல்லுக்கு நேற்று முன்தினம் காலை வந்தார். பின்னர் திண்டுக்கல் பஸ் நிலையத்தில், தூத்துக்குடி பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, தூத்துக்குடி சிறுவனிடம் வந்தாள். மேலும் காலையில் சாப்பிடவில்லை என்று கூறி சிறுமி உதவி கேட்டுள்ளார். இதனால் மனமிறங்கிய சிறுவன் பணம் கொடுத்து உதவி செய்தார். அதை வாங்கிய சிறுமி அங்கிருந்து சென்று விட்டாள். பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமி மீண்டும் அங்கு வந்தாள்.

கண்டதும் காதல்

ஏற்கனவே ஒருமுறை அறிமுகம் ஆனதால் 2 பேரும் பேசிக் கொண்டனர். அப்போது 2 பேருக்கும் இடையே காதல் அரும்பியது. இதையடுத்து சிறுவன், அந்த சிறுமியை பஸ்சில் பழனிக்கு அழைத்து சென்றார்.

பின்னர் பழனியில் இருந்து மீண்டும் திண்டுக்கல்லுக்கு சிறுமியை அழைத்து வந்தார். அதன்பின்னர் எங்கு செல்வது என தெரியாமல் 2 பேரும், திண்டுக்கல் பஸ் நிலையத்திலேயே இருந்துள்ளனர்.

இதற்கிடையே சிறுமியை காணாமல் அவளுடைய பெற்றோர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர். மேலும் சிறுமி கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட போலீசாரை உஷார்படுத்தப்பட்டனர்.

போக்சோவில் கைது

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சிறுவனும், சிறுமியும் தூத்துக்குடிக்கு செல்வதற்காக மதுரைக்கு பஸ்சில் சென்றனர். மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இறங்கிய 2 பேரும், தூத்துக்குடி பஸ்கள் நிறுத்தப்படும் இடத்துக்கு சென்றனர்.

அப்போது சிறுமியின் உறவினர்கள் 2 பேரையும் பார்த்து விசாரித்தனர். அதோடு அவர்கள் அளித்த தகவலின் பேரில் மதுரை போலீசார், 2 பேரையும் மீட்டு, திண்டுக்கல் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சிறுமியை கடத்தி சென்றதாக சிறுவன் மீது திண்டுக்கல் வடக்கு போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Related Tags :
Next Story