திருவொற்றியூரில் திறந்து இருந்த பஸ் பக்கவாட்டு கதவு இடித்து வாலிபர் பலி - பெண் படுகாயம்


திருவொற்றியூரில் திறந்து இருந்த பஸ் பக்கவாட்டு கதவு இடித்து வாலிபர் பலி - பெண் படுகாயம்
x

திருவொற்றியூரில் திறந்து இருந்த பஸ் பக்கவாட்டில் உள்ள ‘டூல்ஸ்’ பெட்டியின் கதவு இடித்து வாலிபர் பலியானார். பெண் படுகாயம் அடைந்தார்.

சென்னை

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணியளவில் தனியார் ஐ.டி. நிறுவன பஸ், பணியாளர்களை இறக்கிவிட்டு டோல்கேட் நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தது. திருவொற்றியூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் போது பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் உள்ள 'டூல்ஸ் பாக்ஸ்' வைத்திருக்கும் பெட்டியின் கதவு திறந்து வெளியே நீட்டியபடி இருந்தது.

இதனை பஸ் டிரைவர் யுகேந்திரன் கவனிக்கவில்லை. பஸ் சென்ற வேகத்தில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த யாஸ்மின்(வயது 34) மற்றும் வெங்கடேசன் (27) ஆகிய 2 பேர் மீது திறந்து கிடந்த அந்த 'டூல்ஸ்' பெட்டியின் கதவு இடித்தது.

இதில் வெங்கடேசன் தூக்கி வீசப்பட்டு அருகில் சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக போடப்பட்டுள்ள பள்ளத்தை மறைந்து வைத்து இருந்த இரும்பு தடுப்பு மீது தலை மோதி கீழே விழுந்தார். இதில் வெங்கடேசனுக்கு தலையில் பலமாக அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

யாஸ்மின் தரையில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பலியான வெங்கடேசன் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். திருவொற்றியூரில் உள்ள ஒரு மளிகை கடையில் பணிபுரிந்து வருகிறார். டீ குடிப்பதற்காக கடைக்கு வந்தபோது விபத்தில் சிக்கி பலியானார்.

படுகாயம் அடைந்த யாஸ்மின்,திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர். அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் யுகேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story