சாம்பாரில் விஷம் கலந்து குடும்பத்தோடு கொல்ல முயன்ற சிறுவன் கைது


சாம்பாரில் விஷம் கலந்து குடும்பத்தோடு கொல்ல முயன்ற சிறுவன் கைது
x

ஆற்காடு அருகே திருடியது குறித்து போலீசில் புகார் செய்வார்கள் என்பதற்காக சாம்பாரில் விஷம் கலந்து குடும்பத்தோடு கொல்ல முயன்ற சிறுவன் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை

பணம் திருட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிளாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி காலை சீனிவாசன் மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.

மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.15,000 திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து சீனிவாசன் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார்.

சாப்பாடு பரிமாற சென்றார்

அப்போது அதேப்பகுதியை சேர்ந்த சிறுவன் வீட்டின் அருகே இருந்து சென்றதாக கூறியுள்ளனர். அதன்பேரில் சிறுவனின் வீட்டிற்கு விசாரிக்க சென்றபோது அவனது அண்ணன் இருந்துள்ளான். அவனிடம் இதுகுறித்து கேட்டபோது என்னுடைய தம்பி வீட்டில் இல்லை எனக் கூறியுள்ளான்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி அதே பகுதியில் உள்ள சீனிவாசனின் தங்கை, சீனிவாசன் வீட்டிற்கு குழந்தைகளுக்கு சாப்பாடு பரிமாற வந்துள்ளார். அப்போது சாம்பாரின் கலர் வித்தியாசமாக இருந்துள்ளது. மேலும் ஒரு வகையான நாற்றம் அடித்துள்ளது.

சாம்பாரில் விஷம் கலப்பு

இதனால் சந்தேகம் அடைந்த அவர் சாம்பாரை வீட்டிற்கு வெளியே கொட்டி உள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வாத்துகள் சாம்பாரை சாப்பிட்டு உள்ளது. சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாத்துக்கள் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளது.

இது குறித்து சீனிவாசன் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்த போது சீனிவாசனின் வீட்டில் பீரோவை உடைத்து அதிலிருந்து ரூ.15 ஆயிரத்தை திருடியதும், இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிப்பார்கள் என்ற அச்சத்தில் சாம்பாரில் கொக்கு மருந்து கலந்ததும் தெரியவந்தது.

சிறுவன் கைது

அதைத்தொடர்ந்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருடிய பணத்தில் ரூ.12,500-க்கு செல்போன் வாங்கி உள்ளான். மீதி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story