லாட்ஜில் தங்கி இருந்த கனடா சுற்றுலா பயணியிடம் ரூ.1 லட்சம், விலை உயர்ந்த பொருட்கள் அபகரிப்பு


லாட்ஜில் தங்கி இருந்த கனடா சுற்றுலா பயணியிடம் ரூ.1 லட்சம், விலை உயர்ந்த பொருட்கள் அபகரிப்பு
x

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்த கனடா நாட்டு சுற்றுலாப்பயணிடம் போலீஸ் போல் நடித்து ரூ.1 லட்சம் பணம், விலை உயர்ந்த பொருட்களை அபகரித்து சென்ற நபர் கூட்டாளியுடன் கைதானார்.

சென்னை

கனடா நாட்டை சேர்ந்தவர் ஸ்ரீதரதாஸ் (வயது 67). சுற்றுலா பயணியான இவர், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 3-ந்தேதி அன்று பாண்டி பஜாரில் உள்ள வெளிநாட்டு பணம் மாற்றும் கடையில் தன்னிடம் இருந்த வெளிநாட்டு டாலர் பணத்தை ரூ.1 லட்சத்து 10 ஆயிரமாக மாற்றினார்.

அப்போது அங்கிருந்த அஜி ஷெரிப் என்ற நபர் ஸ்ரீதரதாசிடம், நானும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவேன் என்று கூறி அறிமுகமாகி உள்ளார். அஜி ஷெரிப்பின் இனிமையான பேச்சு ஸ்ரீதரதாசை கவர்ந்தது. பார்த்தவுடன் காதல் என்பதும் போல் பழகியவுடன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் போன்று ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்ரீதரதாசிடம், நீங்கள் தங்கி உள்ள அறைக்கு நான் வரலாமா? என்று அஜி ஷெரிப் கேட்டுள்ளார். அதற்கு அவரும் உடனே ஆமோதித்தார். பின்னர் 2 பேரும் லாட்ஜிக்கு வந்தனர்.

அவர்கள் லாட்ஜிக்கு வந்த சிறிது நேரத்தில் அவர்கள் தங்கியிருந்த அறை கதவை ஒருவர் தட்டினார். அவர் தன்னை போலீஸ் என்று கூறி, உங்கள் அறையில் போதைப் பொருள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. உங்கள் உடைமைகளை சோதனையிட வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த நபர் ஸ்ரீதரதாஸ் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கூலிங் கிளாஸ், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான காலணி மற்றும் வெளிநாட்டு பணத்தை அபகரித்து சென்றுவிட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் அஜி ஷெரிப்பும் சட்டென்று மாயமானார்.

இதுகுறித்து ஸ்ரீதரதாஸ் சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் லாட்ஜில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய புலன் விசாரணையில் ஸ்ரீதரதாசுடன் லாட்ஜூக்கு வந்த அஜி ஷெரிப் (45) கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், போலீஸ் போல் நடித்து பணம், பொருட்களை அபகரித்து சென்றது புதுக்கோட்டை மாவட்டம் நர்ச்சாந்துபட்டி மலையலிங்கபுரத்தை சேர்ந்த கலியமூர்த்தி (35) என்பதும் தெரிய வந்தது. அவர்கள் 2 பேரும் கூட்டாளிகள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் அவர்கள் 2 பேரும் சிக்கினர். விசாரணையில் கனடா நாட்டு சுற்றுலாப்பயணி ஸ்ரீதரதாசிடம் பழகி அவரது அறைக்கு சென்று அஜி ஷெரிப் முதலில் நோட்டமிட்டுள்ளார். பின்னர் அவரது கூட்டாளி கலியமூர்த்திக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவர் தன்னை மாறுவேடத்தில் வந்த போலீஸ் போல் நடித்து பணம் மற்றும் பொருட்களை எடுத்து சென்றுள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் இதனை பங்கு பிரித்து கொண்டது தெரிய வந்தது.

திருடிய பணத்தில் 8 கிராம் தங்க நாணயம் வாங்கி உள்ளனர். இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் அஜி ஷெரிப், கலியமூர்த்தி ஆகிய 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story