40 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படும் வாய்க்கால்
கோவை முத்தண்ணன் குளத்தின் வாய்க்கால் 40 ஆண்டுகளுக்கு பின் ரூ.20 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை
கோவை முத்தண்ணன் குளத்தின் வாய்க்கால் 40 ஆண்டுகளுக்கு பின் ரூ.20 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முத்தண்ணன் குளம்
கோவை மாநகராட்சியின் கீழ் குறிச்சி குளம், முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், சிங்காநல்லூர் குளம் உள்பட 6 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த குளக்கரைகளில் அழகிய பூங்காக்கள், நடைபாதை, விளையாட்டு மைதானங்கள் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை முத்தண்ணன் குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்வ சிந்தாமணி குளத்திற்கு வாய்க்கால் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வாய்க்கால் 1.25 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த வாய்க்காலின் இருபுறமும் கட்டிடங்கள் பெருகி விட்டன. இதன்காரணமாக கடந்த 40 ஆண்டுகளாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படவில்லை.
பொக்லைன் எந்திரங்கள்
இந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், முத்தண்ணன் குளத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் தூர்வாரப்படாதது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களை வாய்க்கால் பகுதிக்கு கொண்டு செல்ல முடியாதபடி இருபுறமும் கட்டிடங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தனியார் நிலங்களின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று அதன் வழியாக பொக்லைன் எந்திரங்களை கொண்டு சென்று வாய்க்காலை தூர்வாரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உரிய அனுமதி பெற்று ரூ.20 லட்சத்தில் வாய்க்காலை தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
குடியிருப்புகள்
முத்தண்ணன் குளத்தில் இருந்து உபரி நீர் வாய்க்கால் வழியாக செல்வசிந்தாமணி, உக்கடம் பெரிய குளம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த உபரி நீர் செல்லும் வாய்க்கால் கடந்த 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் வாய்க்காலில் அதிகளவு மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.
இதையடுத்து இந்த வாய்க்காலை தூர்வார ஆணைாயளர் பிரதாப் தூர்வார உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் வாய்க்காலை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முத்தண்ணன் குளத்தின் வாய்க்கால் தூர்வாரப் படுவதால் அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.