250 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கார் கவிழ்ந்தது; வடமாநில வாலிபர் பலி


250 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கார் கவிழ்ந்தது; வடமாநில வாலிபர் பலி
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே 250 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கார் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை மங்கலம் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த இர்ஷாத் (வயது 23) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் காரை ஓட்டி வந்த பீகார் மாநிலம் வைஷாலி பகுதியை சேர்ந்த அசைன் அலி என்பவர் இறங்கி ஓடினார். அந்த சமயத்தில் அங்கு ரோந்து பணியில் இருந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார், சந்தேகத்தின் பேரில் அசைன் அலியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள்

இதில் அசைன் அலியும், இர்ஷாத்தும் சேர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கியதில் இர்ஷாத் இறந்துள்ளார். மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க காரில் கடத்தி வந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ புகையிலை பொருட்களை அங்குள்ள நீர்நிலையில் தூக்கி விசிவிட்டு அசைன் அலி தப்பிச்செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அசைன் அலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story