தடுப்பு வேலியில் கார் மோதி விபத்து
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் தடுப்பு வேலியில் கார் மோதி விபத்துக்குள்ளானது. அடிக்கடி விபத்து நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
வால்பாறை
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் தடுப்பு வேலியில் கார் மோதி விபத்துக்குள்ளானது. அடிக்கடி விபத்து நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய கார்
பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் வால்பாறைக்கு காரில் சுற்றுலா வந்தார். பின்னர் வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு காரில் பொள்ளாச்சிக்கு புறப்பட்டனர்.
நள்ளிரவில் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் ரொட்டிக்கடை பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் சாலையோரத்தில் இருந்த எம்.ஜி.ஆர். சிலை வளாகத்தின் தடுப்பு வேலியில் மோதியது. தொடர்ந்து அந்த கார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் தடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
தூக்க கலக்கம்
கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வால்பாறைக்கு சொந்த காரில் சுற்றுலா வருகின்றனர். இவர்கள் காலை முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு, இரவில் சொந்த ஊருக்கு புறப்படுகின்றனர்.
வாகனத்தை ஓட்டுபவர்களும் காலை முழுவதும் ஓய்வு இல்லாமல் இரவு நேரத்தில் வாகனத்தை இயக்கும்போது தூக்க கலக்கத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சொந்த வாகனங்களில் வரக்கூடியவர்கள் அதிகளவில் விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஓய்வு எடுத்து செல்ல வேண்டும்
இதன் காரணமாக விபத்துகளை தடுக்க வால்பாறை பகுதி நெடுஞ்சாலை துறையினர் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் பல இடங்களில் நீண்ட தொலைவில் இருந்து பயணம் செய்து வரக்கூடியவர் தொடர்ந்து வாகனங்களை ஓட்டிச் செல்லாமல் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று அறிவிப்பு பலகையை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் சுற்றுலா பயணிகளிடம் நள்ளிரவு நேரத்தில் மலைப்பாதையில் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுரை வழங்கினாலும் கண்டுகொள்வதில்லை.
இதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளது. சொந்த வாகனம் என்பதாலும், உயிர் சேதம் ஏதுவும் ஏற்படாததாலும் அவர்களுக்குள் பேசி சமாதானம் செய்து கொள்கின்றனர். எனவே இரவு நேரத்தில் மலைப்பாதையில் வாகனங்களை இயக்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.