அரசு பஸ் மீது கார் மோதி விபத்து;10 மாத குழந்தை பரிதாப சாவு


அரசு பஸ் மீது கார் மோதி விபத்து;10 மாத குழந்தை பரிதாப சாவு
x
தினத்தந்தி 28 Jun 2023 2:30 AM IST (Updated: 28 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் அரசு பஸ்சின் பின்னால் கார் மோதிய விபத்தில் 10 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது. கேரளாவில் இருந்து சுற்றுலா வந்தபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

கோயம்புத்தூர்


ஆனைமலை


ஆனைமலையில் அரசு பஸ்சின் பின்னால் கார் மோதிய விபத்தில் 10 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது. கேரளாவில் இருந்து சுற்றுலா வந்தபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


சுற்றுலா வந்தனர்


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஜக்காரியா (வயது 30). இவருடைய மனைவி முபினா (30). இவர்களுக்கு 10 மாத்தில் முகமது யாகியா என்ற குழந்தை உள்ளது.


இந்த நிலையில் முகமது ஜக்காரியா தனது மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுடன் காரில் பரம்பிக்குளம் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டுவிட்டு, மாலையில் பாலக்காட்டிற்கு புறப்பட்டனர்.


அரசு பஸ் மீது மோதல்


இவர்கள் வந்த கார் ஆனைமலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஆனைமலை காந்தி ஆசிரமத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பஸ் சென்றது. திடீரென ஜக்காரியா ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற அரசு பஸ் மீது மோதியது.


இதில் காரின் முன் பகுதி அப்பளம்போல நொறுங்கியது.


இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து அபய குரல் எழுப்பினர். இதில் ஜக்காரியா, அவருடைய மனைவி முபினா, குழந்தை முகமது யாகியா மற்றும் காரில் வந்த உறவினர்கள் யாசியா, ஆயிஷா, நஸ்சியா ஆகியோர் காயமடைந்தனர்.


அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு,அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


10 மாத குழந்தை சாவு


இதற்கிடையில் பலத்த காயமடைந்த 10 மாத குழந்தை முகமது யாகியாவை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 10 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.


விபத்தில் காயமடைந்த மற்ற 5 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story