திண்டிவனத்தில் காற்றாலை பாகத்துடன் சென்ற லாரி மீது கார் மோதி விபத்து-வெளிநாட்டினர் உள்பட 3 போ் காயம்

திண்டிவனத்தில் காற்றாலை பாகத்துடன் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் வெளிநாட்டினர் உள்பட 3 போ் காயம் அடைந்தனர்.
திண்டிவனம்,
காற்றாலை பாகத்துடன் சென்ற லாரி
ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியில் இருந்து திருநெல்வேலி நோக்கி காற்றாலை பாகம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் சவுயராலி கிராமத்தை சேர்ந்த அமரேஷ் குமார் (வயது 25) என்பவர் ஓட்டினார்.
நேற்று அதிகாலை 6 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் லேபே அருகே வந்தபோது சென்னையிலிருந்து புதுச்சேரி ஆரோவில் நோக்கி சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டு பகுதி மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
3 பேர் காயம்
இதில் காரில் பயணம் செய்த புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை சேர்ந்த டிரைவர் அருண்ராஜ் (22), அமெரிக்கா நாட்டில் உள்ள கொலம்பியாவை சேர்ந்த லூகாஸ் (60), சேல்வதார்(11) ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின்பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






