சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து; தொழிலாளி பலி
ஊட்டி அருகே உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வடமாநில தொழிலாளி பலியானார்.
ஊட்டி
ஊட்டி அருகே உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வடமாநில தொழிலாளி பலியானார்.
சரக்கு வாகனம் கவிழ்ந்தது
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 37). இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய். இவர்கள் 2 பேரும் நீலகிரி மாவட்டம் ஊட்டி முத்தோரை பகுதியில் தங்கி இருந்து, கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் நேற்று ஊட்டி நஞ்சநாடு கிராமத்தை சேர்ந்த டிரைவர் ஆனந்தன் என்பவர் தனது சரக்கு வாகனத்தில் உருளைக்கிழங்கு 10 மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல புறப்பட்டார்.
வேனின் முன்பகுதியில் நஞ்சநாட்டை சேர்ந்த பைரவன் என்பவரும், வேனின் பின்னால் உருளைக்கிழங்கு மூட்டைகளுக்கு மேல் நஞ்சநாட்டை சேர்ந்த முருகேசன், தொழிலாளர்களான சங்கர், விஜய் ஆகியோர் இருந்தனர். நஞ்சநாட்டில் இருந்து ஊட்டியை நோக்கி சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது.
தொழிலாளி பலி
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வாகனத்தில் இருந்த உருளைக்கிழங்கு மூட்டைகள் கீேழ விழுந்தன. இந்த விபத்தில் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆனந்தன், பைரவன், முருகேசன், விஜய் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் ப்ககத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.