கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் மீது வழக்கு

சமூக வலைத்தளத்தில் கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
சமூக வலைத்தளத்தில் கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
ரவுடிகள் கைது
கோவையில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்தன. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலே கொலைகளுக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோவையில் ஏராள மான ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க கோவையை சேர்ந்த 2 கும்பல்கள் கத்தி, அரிவாளுடன் மிரட்டும் வகையில் வீடியோ, புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோ வெளியிட்ட இளம்பெண் வினோதினி என்ற தமன்னா உள்பட 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
வீடியோ வெளியீடு
இதையடுத்து யாரையாவது மிரட்டும் வகையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படம் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் இருதரப்பினர் இடையே மோதலை ஏற்படுத் தும் வகையில் வீடியோ, புகைப்படங்கள் வெளியிடப்படுகிறதா என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை கணபதி காமராஜபுரத்தை சேர்ந்த சுகந்தாராம் (வயது 25) என்பவர் கத்தியுடன் நிற்பதுபோன்ற வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ஆயுதத்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்ட சுகந்தாராம் மீது சரவணம்பட்டி போலீசார் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் வலைவீச்சு
இதை அறிந்த சுகந்தாராம் தலைமறைவாகி விட்டார். எனவே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், சுகந்தாராமை வலைவீசி தேடி வருகிறார்கள். இவர் மீது ஏற்கனவே சரவணம்பட்டி, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை மிரட்டல், அடிதடி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.






