ஆன்லைனில் 4 மாதத்திற்கு முன்பு வாங்கிய செல்போன் வெடித்த பயங்கரம் - மாணவர் படுகாயம்


ஆன்லைனில் 4 மாதத்திற்கு முன்பு வாங்கிய செல்போன் வெடித்த பயங்கரம் - மாணவர் படுகாயம்
x

ராணிப்பேட்டை அருகே ஆன்லைனில் 4 மாதத்திற்கு முன்பு வாங்கிய செல்போன் வெடித்ததால் மாணவன் படுகாயம் அடைந்தார்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி.டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முத்து (16) 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய மாமா சந்தோஷ் என்பவர் ஆன்லைனில் செல்போன் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் வாங்கி உள்ளார். ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கிய இந்த செல்போனை முத்து பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாணவன் செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பைக்கில் தனது உறவினர் மனோகர் என்பவருடன் வாலாஜா ரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார். வாணாபாடி அருகே அம்மூர் சாலையில் பைக் வந்து கொண்டிருந்தபோது முத்துவின் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து பேண்ட் தீப்பிடித்தது.

இதில் அதிர்ச்சி அடைந்த முத்து பைக்குடன் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி கீழே விழுந்தார். இதில் மாணவனுக்கு தொடையில் தீக்காயமும் பைக்கில் இருந்து விழுந்ததில் தலையில் ரத்த காயமும் ஏற்பட்டது. மனோகரனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைனில் நான்கு மாதங்கள் முன் வாங்கி செல்போன் வெடித்து மாணவர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story