கள்ளக்குறிச்சியில்தனியார் பள்ளி பஸ்சை ஓட்டிப்பார்த்து ஆய்வு செய்த கலெக்டர்27 பஸ்களில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி பஸ்சை ஓட்டிப்பார்த்து கலெக்டர் ஆய்வு செய்தார். இதில் 27 பஸ்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து நேற்று கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி.பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதற்காக மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ், வேன்கள் அங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. இந்த வாகனங்களை , மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்றும் வாகனத்தினுள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? முதலுதவி சிகிச்சை பெட்டி, அவசரகதவு உள்ளிட்டவை உள்ளதா? என்று ஆய்வு செய்தார். மேலும் பஸ்களை அவர் இயக்கியும் பார்த்தார்.
27 பஸ்களில் பாதுகாப்பு குறைபாடு
ஆய்வுக்குப் பின் கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில், இங்கு 387 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 27 பஸ்களின் இயக்க நிலைகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்து மறுஆய்விற்கு உட்படுத்த திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் பயணிப்பதால், டிரைவர்கள் சாலை விதிமுறைகளை பின்பற்றி, கவனமுடன் இயக்க அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, போக்குவரத்து துறை மற்றும் தீயணைப்புத்துறையின் சார்பில் விபத்து காலங்களில் பேருந்து ஓட்டுநர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு செயல்விளக்க பயிற்சியும் டிவைர்களுக்கு அளிக்கப்பட்டது.
ஆய்வின் போது கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) துரைராஜ், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.