மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் விரக்தி; கல்லூரி மாணவர் தற்கொலை
தேவாரத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தேவாரம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், கேரள மாநிலம் உடும்பன்சோலையில் தோட்ட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் அய்யப்பன் (வயது 21). இவர் தேவாரம் அருகே தே.சிந்தலைசேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் அய்யப்பன் தனது பெற்றோரிடம், கல்லூரிக்கு சென்று வருவதற்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்கள், தற்போது குடும்ப சூழ்நிலை சரியில்லை என்றும், அதனால் மோட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என்றும் கூறினர்.
ஆனால் பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் அய்யப்பன் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அய்யப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.