மாமல்லபுரம் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலம்
மாமல்லபுரத்தில் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
எரிந்த நிலையில் மாணவரின் உடல்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் எரிந்து, அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது. மாமல்லபுரம் போலீசார் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்தவர் ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டம், நாகரெட்டிபாளையம் நகரைச்சேர்ந்த என்ஜீனியரிங் மாணவரான கண்டுநவீன் (வயது21) என்பது தெரியவந்தது. இவர் அங்குள்ள தனியார் என்ஜீனியரிங் கல்லூரியில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வருவதாகத் தெரிந்தது. அவரது பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஏப்ரல் 14-ந்தேதி தனது பெற்றோரிடம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று வருவதாகக் கூறியுள்ளார்.
ஆன்மிகத்தில் நாட்டம்
என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான கண்டுநவீன் தனது கல்லூரியில் சக மாணவர்களிடம் அதிகம் பேசமாட்டாராம். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டு, ஒரு முழு ஆன்மிகவாதியாகவே மாறியுள்ளார். கல்லூரி விடுமுறை நாட்களில் அடிக்கடி விரதம் இருந்து, மாலை போட்டுக்கொண்டு, ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்றுவிடுவாராம். நெற்றியில் குங்குமம், விபூதி, கழுத்தில் மாலை என எப்போதும் ஒரு சாமியார் போல காட்சி அளித்ததால் உடன் படிக்கும் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளாகி உள்ளார்.
தீக்குளித்து தற்கொலை
இதனால் அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஏப்ரல் 14-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு பவானி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு மாமல்லபுரம் வந்த அவர் அங்குள்ள மணமை காட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.