கல்லூரி மாணவரை தாக்கி வழிப்பறி
திண்டிவனத்தில்கல்லூரி மாணவரை தாக்கி வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் கிடங்கல் -2 பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன்கள் சேட்டு என்கிற பிரதீப்குமார் (வயது 26), பாலாஜி (21). இவர்கள் 2 பேரும் திண்டிவனம் மேம்பால பகுதியில் மதுபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த உமர் சாகிப் தெரு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான முகமது அப்பாஸ் என்பவரை வழிமறித்து பீர் பாட்டிலால் அவரது தலையில் தாக்கினர். மேலும் அவரது சட்டை பையில் இருந்த ரூ.500-ஐ பறித்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும், நாங்கள் தான் இப்பகுதிக்கு பெரிய தாதா. எனவே இங்குள்ள அனைவரும் எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என கூறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பீர் பாட்டிலுடன் சுற்றித்திரிந்தனர். இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதீப் குமார், பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் பிரதீப் குமார் மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 12 வழக்குகளும், பாலாஜி மீது ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.