ஆற்காடு அருகே திருமண நாளில் தம்பதியர் விபத்தில் பலி


ஆற்காடு அருகே திருமண நாளில் தம்பதியர் விபத்தில் பலி
x

ஆற்காடு அருகே திருமண நாளில் தம்பதியர் விபத்தில் பலியானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ஆற்காடு,

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 34 இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் டெக்னீசியனாக வேலை செய்து வந்துள்ளார் .இவரது மனைவி சங்கீதா 29 இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு மகன்கள் உள்ளனர் .மூத்த மகன் கிஷோர்( மூன்றரை)3 1/2வயது எல்.கே.ஜி. படித்து வருகிறான். தஸ்வந்த் 1 வயது கைக்குழந்தை இந்நிலையில் இன்று இவர்களுக்கு திருமண நாள். அதனை முன்னிட்டு இன்று காலை கிஷோரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஈஸ்வரன் இவரது மனைவி சங்கீதா மகன் தஸ்வந்த் ஆகிய மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு அருகே உள்ள புதுபாடி பச்சையம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது கடப்பந்தாங்கல் அருகே வரும்போது ஆற்காட்டில் இருந்து செய்யார் நோக்கி எதிரே வந்த தனியார் பஸ் ஈஸ்வரன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் தம்பதியர் ஈஸ்வரன், சங்கீதா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயம் ஏற்பட்ட தஸ்வந்த் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தனியார் பஸ் டிரைவரின் கவனக்குறைவால் மற்றும் அதிவேகமாக வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறி இதற்கு ஒரு முடிவு தெரியாமல் பிணத்தை இங்கிருந்து அகற்றக்கூடாது என சாலை மறியலில் ஈடுபட்டனர் .இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர் அதன் பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த திடீர் சாலை மறியலினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தம்பதியர் ஈஸ்வரன், சங்கீதா ஆகியோரின் திருமண நாளிலேயே விபத்தில் இறந்தது. அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story