வாய்க்காலுக்குள் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு


வாய்க்காலுக்குள் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
x

வாய்க்காலுக்குள் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

பெரம்பலூர்

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே மூலிமங்கலம் நாட்டுக்கல் 4-வது தெருவை சேர்ந்தவர் மாரப்பன்(வயது 56). விவசாயியான இவர், வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தனது பசுமாட்டை அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பசுமாடு அந்த பகுதி வழியாக செல்லும் கழிவுநீர் வாய்க்கால் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது நிலை தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்த பசுமாட்டால் மீண்டும் எழுந்து வர முடியவில்லை. இதனைக்கண்ட மாரப்பன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பசுமாட்டை மேலே கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் முயற்சி தோல்வியடைந்ததால் இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து கிடந்த பசுமாட்டை கயிற்றைக் கட்டி லாவகமாக இழுத்து மேலே கொண்டு வந்தனர். பின்னர் பசுமாட்டை உரிமையாளர் மாரப்பனிடம் ஒப்படைத்தனர்.


Next Story