குட்டையில் பிடிபட்ட முதலை
குட்டையில் முதலை பிடிபட்டது
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை அடுத்த ஆலம்பாடி கிராமத்தில் நெல் நடவு வயலில் முதலை நடமாட்டம் இருப்பதாகபுள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு விவசாயி மாணிக்கம் என்பவர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆலம்பாடி கிராமத்திற்கு விரைந்து சென்று வயலுக்குள் இறங்கி முதலையை தேடினர். இதனிடையே அங்கு இருந்த முதலை அருகே உள்ள குட்டைக்குள் இறங்கி மறைந்தது. தொடர்ந்து நீண்ட நேர தேடலுக்கு பின்னர் முதலை பிடிபட்டது. அந்த முதலை 6 அடி நீளமும், 50 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. பின்னர் அந்த முதலையை வனவர் பாலசுப்பிரமணியன், வனக்காவலர் ஜான்ஜோசப் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த முதலையை கல்லணை அருகே உள்ள காவிரி ஆற்றில் விட்டனர். கொள்ளிடம் ஆற்றில் இருந்து வாய்க்கால் மூலம் அந்த முதலை வயலுக்கு வந்து இருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர். முதலை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.