செந்துறை அருகே சுங்கச்சாவடி காவலாளி அடித்துக்கொலை


செந்துறை அருகே சுங்கச்சாவடி காவலாளி அடித்துக்கொலை
x

செந்துறை அருகே சுங்கச்சாவடி காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது கைகள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது.

அரியலூர்

வாலிபர் பிணமாக மீட்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடியில் இருந்து கீழராயம்புரம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சாலையோரம் வாலிபர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடித்துக்கொலை செய்யப்பட்டு சட்டை எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரத்த காயம்

இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபரின் கை, கால், தலை பகுதிகளில் கடுமையாக தாக்கப்பட்டு ரத்த காயங்கள் இருந்தன. மேலும், அந்த வாலிபரை வேறு எங்கோ கொலை செய்து தடயங்களை மறைக்க அவரது உடலை இங்கே கொண்டு வந்து போட்டு எரிக்க முயன்றது தெரியவந்தது.

கரும்பு சக்கை மற்றும் கருவேலம் முட்களை போட்டு எரித்ததால் அவரது உடல் முழுவதும் எரியாமல் சட்டையின் ஒரு பகுதி மட்டுமே எரிந்து இருந்தது தெரியவந்தது.

சுங்கச்சாவடி காவலாளி

இதையடுத்து, போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், ஆனந்தவாடி சாலையில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி நின்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனைதொடர்ந்து தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் வல்லரசு என்கிற சுரேஷ்குமார் (வயது 23) என்பதும். இவர் கடந்த 10 நாட்களாக திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மணகெதி சுங்கச்சாவடியில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story