காமேஸ்வரத்தில் தினசரி காய்கறி சந்தை அமைக்க வேண்டும்
காமேஸ்வரத்தில் தினசரி காய்கறி சந்தை அமைக்க வேண்டும்
காமேஸ்வரத்தில் தினசரி காய்கறி சந்ைத அமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-
ஆறுமுகம்(பா.ஜ.க): திருப்பூண்டியில் உள்ள பம்பு செட் மூலம் பிரதாபராமபுரத்தில் உள்ள கீரநேறியில் நீர் இறைத்து விவசாயத்திற்காக இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காமேஸ்வரத்தில் தினசரி காய்கறி சந்தை அமைக்க வேண்டும்.
செல்வம்(இ.கம்யூ): ஜனவரி மாதத்தில் மேட்டூர் அணையை மூட உள்ளதால் தாளடி பயிர்களை தாமதமாக பயிர்செய்வதால் மேட்டூர் அணையை தாமதமாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாளடி பயிர் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும்.
கணினி வகுப்பறை அமைக்க வேண்டும்
அலெக்ஸ்(தி.மு.க): கருங்கண்ணி ஊராட்சியில் மகிழி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அதனை சரி செய்து குடிநீர் வாரம் ஒரு முறையாவது தண்ணீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதா(தி.மு.க): திருக்குவளையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர் பணி காலியாக உள்ளது. உடனே ஆசிரியர்களை பணியமர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏழிசைவல்லபி(அ.தி.மு.க): விழுந்தமாவடி மணல்மேடு அரசு நடுநிலைப்பள்ளியில் பழுதடைந்த சமையல் கூட்டத்தினை புதுப்பித்து தரவேண்டும். மேலும் அந்தப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தில் கணினி வகுப்பறை அமைத்து தர வேண்டும்.
விழுந்தமாவடி ஊராட்சியில் கடலில் சென்று கலக்க கூடிய வடிகால் வாய்க்கால்களின் முகத்துவாரத்தில் கடல் நீர் ஊருக்குள் புகாமல் தடுப்பணை கட்ட வேண்டும்.
ஒன்றியக்குழு தலைவர்: நிதிநிலையின் அடிப்படையில் உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித்தரப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர். இதில் மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.