பால் விலையை நிர்ணயிக்க ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்


பால் விலையை நிர்ணயிக்க ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்
x

பால் விலையை நிர்ணயிக்க ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தர்மபுரி

பால் விலையை நிர்ணயிக்க ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் பால் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பால் விலை நுகர்வோருக்கு அதிக அளவில் உயர்த்தப்படுகிறது. அதே நேரத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்படவில்லை.

இதற்கு தீர்வு காண பால் விற்பனை விலை மற்றும் கொள்முதல் விலையை முறையாக நிர்ணயிக்க ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரவள்ளிக்கிழங்கு அரவை

தர்மபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கோமாரி நோய் தடுப்பூசியை பாதிப்பு உள்ள பகுதிகளில் விரைவாக கால்நடைகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மரவள்ளிக்கிழங்குகளை அரவைக்கு எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு ரூ.100 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்படும். இதை தடுக்க மரவள்ளிக்கிழங்குகளை முறையாக அரவைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகும் விலையை வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் பருத்தியை காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

உழவன் செயலி

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகளை போட விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் உழவன் செயலியில் இணைப்பதற்கான நடவடிக்கையை வேளாண்துறை அதிகாரிகள் தீவிரபடுத்த வேண்டும். மின்னல் தாக்கி தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, செயற்பொறியாளர் மாது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசேகரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல உதவி இயக்குனர் மணிமாறன் மற்றும் துறை அதிகாரிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story