மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்கள்


மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்கள்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சில ஊராட்சிமன்ற தலைவர்கள் பிரச்சினைகளை பெரிதாக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்கள் என்று கலெக்டர் வளர்மதி காட்டமாக பேசினார்.

ராணிப்பேட்டை

ஆய்வுகூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுவது குறித்து 288 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மற்றும் ஊராட்சிகளில் சுகாதாரம் மற்றும் சுத்தத்தை கடைபிடிக்கும் நம்ம ஊரூ சூப்பரு விழிப்புணர்வு இயக்கம் நடத்திடுவது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கிராமத்தின் முன்னேற்றங்கள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் ஊரை தூய்மையாகவும், சுகாதாரமும் கடைபிடிக்க நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை இந்த மாதத்தில் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்த திட்டத்தில் முழுமையாக செயல்பட்டு உங்களுடைய ஊராட்சிகளை தூய்மையாகவும், குப்பை இல்லாத கிராமமாகவும் மாற்ற வேண்டும்.

குழந்தை திருமணம்

குப்பைகள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்தும், மேலும் உங்கள் ஊர் பொதுமக்கள் வீடுகளில் இருந்து குப்பைகளை வழங்கும் போது மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவதற்கும் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட உங்கள் பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி மன்றமும் சிறப்பாக போட்டி போட்டு இதனை செயல்படுத்தி அனைத்து ஊராட்சிகளும் பரிசுகளை பெறும் விதமாக செயல்பட வேண்டும்.

அதேபோல 2023-24 ஆம் நிதியாண்டில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்க பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கட்டப்பட்டு வரும் வீடுகளை உடனடியாக முடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 100 நாள் வேலை திட்டப் பணிகளை கட்டாயம் வழங்க வேண்டும்.

குழந்தை திருமணம் உங்கள் கிராமத்தில் நடைபெற்றால் நீங்களும் அதற்கு ஒரு முக்கிய குற்றவாளி என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்க அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுதி ஏற்று செயல்படுங்கள்.

அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக

ஒவ்வொரு ஊராட்சிகளும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அந்தப் பிரச்சினைகளை பெரிதாக்கி தூண்டிவிட்டு பொதுமக்களை சாலை மறியல், போராட்டங்கள் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர்களே அல்லது பெண் தலைவர்களின் கணவர்மார்களே தூண்டுதலாக உள்ளனர் என தெரிய வருகிறது.

சாலை வசதி அல்லது பட்டா தேவை போன்ற பிரச்சினைகள் இருந்தால் அதனை பெரிதாக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக சில ஊராட்சி மன்ற தலைவர்கள் செயல்படுகிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசு நிர்வாகத்துடன் இணைந்து அரசு விதிமுறைகள் என்ன தெரிவிக்கின்றதோ அதனை பின்பற்றியே ஒவ்வொரு வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. விதிமுறைகளை மீறி செயல்படுத்த முடியாத வகையில் இருக்கும் பிரச்சினைகளை தூண்டிவிட்டு பின்னால் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எங்களுக்கு தெரிய வருகிறது. இவைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது. இதை ஊராட்சி மன்ற தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முற்றுப்புள்ளி வையுங்கள்

எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்களை சமாதானப்படுத்தி, விதிமுறைகளின் படியே செயல்படுத்த முடியும் என மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் உங்களை ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுத்து உள்ளார்கள். பிரச்சினைகளை தூண்டி விடுவதற்கு உங்களை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குமார், முன்னோடி வங்கி மேலாளர் ஆலியம்மா ஆபிரகாம் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story