பிளஸ்-2 படித்துவிட்டு கிளீனிக் நடத்திய போலி டாக்டர் கைது


பிளஸ்-2 படித்துவிட்டு கிளீனிக் நடத்திய போலி டாக்டர் கைது
x

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பிளஸ்-2 படித்துவிட்டு கிளீனிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பச்சையம்மன் நகரில் வசிப்பவர் ராஜேந்திரன் (வயது 65). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இவர் பழவேற்காடு கோட்டைக்குப்பம் தெருவில் கிளீனிக் நடத்தி டாக்டர் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அலோபதி மருத்துவம் படிக்காமல் மருந்து ஊசிகள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட பொது மருத்துவ இணை இயக்குனருக்கு புகார்கள் சென்றது.

இதனையடுத்து மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர், மருந்து ஆய்வாளர், பழவேற்காடு அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோர் பழவேற்காட்டில் இயங்கி வரும் போலி கிளீனிக்கு சென்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அங்கு ஆய்வு செய்தபோது ராஜேந்திரன் பிளஸ்-2 மட்டுமே படித்து விட்டு அலோபதி மருத்துவம் செய்வது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த அலோபதி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பழவேற்காடு அரசு தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் முகமது பாத்திமா திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருப்பாலைவனம் போலீசில் இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து போலி டாக்டர் ராஜேந்திரனை கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரித்ததில், தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணி செய்த போது ஏற்பட்ட அனுபவத்தின் பேரில் தனியார் கிளீனிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. பின்னர் ராஜேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story