ரூ.7 லட்சத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த விவசாயி
டிராக்டர் கடனுக்காக ஏலம் விடப்பட்ட தோட்டத்தை மீட்டு தரக்கோரி, ரூ.7 லட்சத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
டிராக்டர் கடனுக்காக ஏலம் விடப்பட்ட தோட்டத்தை மீட்டு தரக்கோரி, ரூ.7 லட்சத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ.7 லட்சத்துடன் வந்த விவசாயி
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமானவர்கள் மனுக்களை வழங்கினர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த விவசாயி சுகில் (வயது 45) என்பவர் ரூ.7 லட்சத்துடன் கண்ணீர் மல்க மனு வழங்க வந்தார்.
அவர் வழங்கிய மனுவில், ''திசையன்விளை அருகே மன்னார்புரம் பகுதியில் 19½ ஏக்கர் நிலம் வாங்கி ேதாட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டுள்ளேன். கடந்த 2005-ம் ஆண்டு எனது தோட்டத்தின் பத்திரங்களை திசையன்விளையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்து டிராக்டர் ஒன்றை கடனாக வாங்கினேன். அதற்கு ரூ.80 ஆயிரம் வரையிலும் தவணைத்தொகை திருப்பி செலுத்தினேன். பின்னர் கடனை திருப்பி செலுத்தவில்லை. தொடர்ந்து தோட்டத்தை ஏலம் விடுவதாக அறிவிப்பு வந்ததையடுத்து வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.7 லட்சத்துடன் வங்கிக்கு சென்றேன். ஆனால் பணத்தை பெறாமல் காலக்கெடு முடிந்ததாக கூறி மண்டல அலுவலகத்துக்கும், கிளை அலுவலகத்துக்கும் மாறி மாறி அலைக்கழித்தனர். தொடர்ந்து எனது தோட்டத்தை ஏலம் விட்டுள்ளனர். தற்போது வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.7 லட்சத்துடன் வந்துள்ளேன். எனக்கு வாழ்வாதாரமாக விளங்கும் தோட்டத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தார்.
கால்வாயில் தண்ணீர் திறந்து விட...
நெல்லை நயினார்குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் நெல்லையப்பன் வழங்கிய மனுவில், ''நெல்லை கால்வாய் மூலம் சுமார் 7,900 எக்டேர் நஞ்சை நிலம் பாசன வசதி பெறுகிறது. இங்கு கடந்த 3 ஆண்டுகளாக ஒரு போகம்தான் நெல் விளைகிறது. எனவே நெல்லை கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும். கால்வாயில் தூர்வாரும் பணிகள் 30 சதவீதம்தான் நடந்துள்ளது. பணிகள் முழுமையாக நடக்க உதவி செய்ய வேண்டும். பாசன நிலத்தில் உள்ள விளைநிலங்களை பட்டா போட்டு வீடு கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
நாங்குநேரி யூனியன் தெற்கு நாங்குநேரியை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் வந்து தங்கள் பகுதியில் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.