கொங்கணாபுரம் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி பிணமாக மீட்பு-தற்கொலையா? போலீசார் விசாரணை


கொங்கணாபுரம் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி பிணமாக மீட்பு-தற்கொலையா? போலீசார் விசாரணை
x

கொங்கணாபுரம் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

எடப்பாடி:

விவசாயி

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டி ஊராட்சி கல்மேடு மணியக்காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் சின்னண்ணன் (வயது 71). விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றவர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள விவசாய நிலங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சின்னண்ணன் அணிந்திருந்த காலணிகள் கிடப்பதை கண்ட அவரது உறவினர்கள் இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு துறை மற்றும் கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் கிணற்றில் இருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றினர். அப்போது கிணற்றில் சின்னண்ணன் இறந்து கிடந்தார். இதையடுத்து அவருடைய உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

பின்னர் போலீசார் சின்னண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னண்ணன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story