சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் போல் நடித்து பெண் பயணியிடம் நகை பறிப்பு - இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் போல் நடித்து பெண் பயணியிடம் நகை பறித்த இலங்கையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கையைச் சேர்ந்த நதிஷா ரோஷினி (வயது 47), வசீகா (45) ஆகியோர் கடந்த 8-ந்தேதி அதிகாலை கொழும்பில் இருந்து பயணிகள் விமானத்தில் வந்தனர். இவர்கள் சுங்க இலாகா மற்றும் குடியுரிமை சோதனையை முடித்து விட்டு வெளியில் வந்தனர். பின்னர் சென்னை மண்ணடி செல்வதற்காக விமான நிலையத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்றனர்.
கார் பார்க்கிங் அருகே நடந்து வந்தபோது அவர்களை 2 பேர் வழிமறித்து, 'நாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள்' என்று கூறி தங்கள் அடையாள அட்டையை காட்டினர். பின்னர், "நீங்கள் இருவரும் அதிக நகைகளை அணிந்து உள்ளீா்கள். நகைகளுக்கு சுங்க வரி கட்டாமல் வெளியில் எடுத்து வந்து விட்டீர்கள். மீண்டும் சுங்க அலுவலகத்துக்கு வந்து வரியை கட்டவேண்டும்" என்றனர்.
மேலும் நதிஷா ரோஷினி அணிந்திருந்த 59 கிராம் தங்க வளையல்களை கழற்றி வாங்கிய அவர்கள், சுங்க வரியை கட்டிவிட்டு அதனை வாங்கி கொள்ளும்படி கூறிவிட்டு சென்றனர்.
நதிஷா ரோஷினி, சுங்க வரியை கட்ட பணம் எடுத்துக்கொண்டு விமான நிலைய சுங்க இலாகா அலுவலகம் சென்றாா். ஆனால் அதனை மறுத்த அதிகாரிகள், "நாங்கள் யாரும் அதுபோல் உங்களிடம் இருந்து நகையை வாங்கவில்லை. உங்களை யாரோ ஏமாற்றி உள்ளனர்" என்றனா்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நதிஷா ரோஷினி, அதன்பிறகுதான் யாரோ மர்மநபர்கள் சுங்க இலாகா அதிகாரிகள் போல் நடித்து தன்னிடம் நகையை பறித்து சென்றதை உணர்ந்தார். இதுபற்றி அவர் விமான நிலைய போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மீனம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் புகழ்வேந்தன், இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் விமான நிலைய காா் பாா்க்கிங் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலி சுங்க இலாகா அதிகாரிகள் 2 பேரை மடக்கி பிடித்தனர். அப்போது கீழே விழுந்ததில் ஒருவருக்கு காலில் அடிபட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் இலங்கையை சேர்ந்த செல்லையா அரவிந்தன் (40) மற்றும் முகமது நசீம் (31) என்பதும், இவர்கள் கடந்த ஒரு மாதமாக சென்னை விமான நிலையத்தில் சுற்றி கொண்டு இலங்கையில் இருந்து குருவியாக வருபவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் போல் நடித்து நகை, பணம் பறித்ததும் தெரிந்தது.
2 பேரிடம் இருந்தும் 125 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். விமானங்களில் தனியாக வரும் இலங்கை பெண்களை குறி வைத்து இவர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.