ஹெல்மெட் அணியாமல் சென்ற வாலிபருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
நெய்வேலியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாலிபருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் செல்போனில் குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி
மந்தாரக்குப்பம்
வடலூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஆதவன்(வயது 29). தச்சு தொழிலாளியான இவர் சம்பவத்தன்று காலை வேலைக்காக மோட்டார் சைக்கிளில் நெய்வேலி இந்திரா நகருக்கு சென்றார். அங்கு வேலை முடிந்ததும் ஆதவன் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். வடக்குத்து பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அவரை அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நெய்வேலி போலீசார் நிறுத்தி வாகனத்தின் பதிவு எண்ணை குறித்தனர். இதுபற்றி ஆதவன் போலீசாரிடம் கேட்டதற்கு நீங்கள் ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக அபராதம் விதிக்கிறோம் என கூறினர். பின்னர் அவர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டுக்கு வந்ததும் தனது செல்போனில் ரூ.20 ஆயிரம் அபராதம் என்று வந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததற்காக இவ்வளவு பெரிய அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளதே? தச்சுவேலை செய்து வரும் தன்னால் இவ்வளவு பெரிய அபாரத தொகையை எவ்வாறு செலுத்த முடியும் என தனது நண்பா்களிடம் கூறி புலம்பினார். தற்போது இந்த குறுஞ்செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.